Tirukkuṛaḷ - திருக்குறள்

Monday, August 17, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல்.

 குறள் 31:

"சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு."

மு.வரதராசனார் உரை:

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?.

சாலமன் பாப்பையா உரை:

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா?.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)


சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.

மணக்குடவர் உரை:

முத்தியுந்தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கமுண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பெருஞ்சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்கள் உயிருக்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது?.

Translation:

It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtain?

Explanation:

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?.

No comments:

Post a Comment