Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 5, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: தவம்.

 குறள் 263:

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

மு.வரதராசனார் உரை:

துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.

சாலமன் பாப்பையா உரை:

துறவு மேற்கொண்டவர்களுக்கு உதவ எண்ணி, மற்றவர்கள் தவம் செய்வதை மறந்து இருப்பார்கள் போலும்.

பரிமேலழகர் உரை:

மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார், துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் - துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு - அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார் போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை:

துறந்தவர்களுக்கு உணவு கொடுத்தலை வேண்டித் தவிர்ந்தாராயினரோ? இல்வாழ்வார் தவஞ் செய்தலை. இது தானத்திலும் தவம் மிகுதியுடைத்தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறவிக்கு உணவு முதலியன கொடுத்து உதவவேண்டித் தவம் செய்வதை மறந்துவிட்டார்கள் போலும்!

Translation:

Have other men forgotten 'penitence' who strive

To earn for penitents the things by which they live?.

Explanation:

It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practice) austerity ?.

No comments:

Post a Comment