குறள் 215:
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு."
மு.வரதராசனார் உரை:
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும்.
பரிமேலழகர் உரை:
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும். (நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
ஊர் உண்கின்றகேணி நீர் நிறையப் புகுந்தாலொக்கும்: உலகத்தாரெல்லாராலும் நச்சப்படுகின்ற பெரிய வொப்புரவு அறிவானது செல்வம். இஃது ஒப்புரவறிவார்க்கு உளதாகிய செல்வம் நச்சிச்சென்றார் வேண்டியவாறு முகக்கலா மென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உலக நடையினை அறிந்து நடக்கின்ற பேரறிஞனுடைய செல்வமானது ஊரில் வாழ்பவர்கள் தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்திருப்பது போலாகும்.
Translation:
The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
Explanation:
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
No comments:
Post a Comment