Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 1, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: தீவினையச்சம்.

 குறள் 201:

"தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு."

மு.வரதராசனார் உரை:

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

சாலமன் பாப்பையா உரை:

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, பாவங்களாயின செய்தற்கு அஞ்சுதல். இதனான் மெய்யின்கண் நிகழும் பாவங்கள் எல்லாம் தொகுத்து விளக்குகின்றார் ஆகலின்.இது பயன்இல சொல்லாமையின்பின் வைக்கப்பட்டது.)


தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை:

என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தீய செயல் என்னும் செருக்குடைய அறியாமைக்கு தீவினையாளராகிய தீச்செயல் நெஞ்சங்கொண்டவர்கள் அஞ்சமாட்டார்கள். சீரிய சிறப்புடையவர்கள் அஞ்சப் படுவார்கள்.

Translation:

With sinful act men cease to feel the dread of ill within,

The excellent will dread the wanton pride of cherished sin.

Explanation:

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

No comments:

Post a Comment