Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, September 4, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: புலான்மறுத்தல்.

 குறள் 259:

"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று."

மு.வரதராசனார் உரை:

நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.

பரிமேலழகர் உரை:

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று - ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).

மணக்குடவர் உரை:

நெய் முதலான அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும் ஒன்றினுயிரை நீக்கி அதனுடம்பை யுண்ணாமை நன்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

நெய் முதலியவற்றைச் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்வதைவிட ஒரு விலங்கின் உயிரினைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை நல்லதாகும்.

Translation:

Than thousand rich oblations, with libations rare,

Better the flesh of slaughtered beings not to share.

Explanation:

Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

No comments:

Post a Comment