Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: ஊழியல். அதிகாரம்: ஊழ்.

 குறள் 376:

"பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம."

மு.வரதராசனார் உரை:

ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.

பரிமேலழகர் உரை:

பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப் போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான் ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் அவை தமக்கு ஆகா: தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் அவை போகா. இது முன்புள்ள செல்வம் காவற்படுதலும் களவு போதலும் ஊழினாலேயா மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஊழினால் தம்மிடம் இருக்கக் கூடாத பொருள்கள், வருந்திக் காப்பாற்றினாலும் தம்மிடத்து நில்லாமல் போகும். ஊழினால் தம்மிடம் இருக்க வேண்டிய பொருள்கள் புறத்தே கொண்டு போய்த் தள்ளினாலும் தம்மைவிட்டுப் போகாவாம்.

Translation:

Things not your own will yield no good, however you guard with pain;

Your own, however you scatter them abroad, will yours remain.

Explanation:

Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.

No comments:

Post a Comment