குறள் 291:
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."
மு.வரதராசனார் உரை:
வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.
பரிமேலழகர் உரை:
[அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.)
வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.).
மணக்குடவர் உரை:
பொய் சொல்லாத மெய்யென்று சொல்லப்படுவது யாதென்று வினவின், பிறர்க்கு யாதொன்றானும் தீமை பயவாத சொற்களைச் சொல்லுதல், வாய்மை யாது என்றார்க்கு இது கூறப்பட்டது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது மற்ற உயிர்களுக்குத் தீங்கினைச் சிறிதும் உண்டாக்காத சொற்களைச் சொல்லுதலாகும்.
Translation:
You ask, in lips of men what 'truth' may be;
'This speech from every taint of evil free.
Explanation:
Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).
No comments:
Post a Comment