Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 10, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வாய்மை.

 குறள் 292:

"பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்."

மு.வரதராசனார் உரை:

குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.

சாலமன் பாப்பையா உரை:

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.

பரிமேலழகர் உரை:

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பொய்யும் மெய்யோ டொக்கும், குற்றந் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறர்க்கு குற்றம் நீங்கிய நன்மையினது தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படும்.

Translation:

Falsehood may take the place of truthful word,

If blessing, free from fault, it can afford.

Explanation:

Even falsehood has the nature of truth, if it confer a benefit that is free from fault.

No comments:

Post a Comment