Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 22, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 480:

"உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்."

மு.வரதராசனார் உரை:

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

பரிமேலழகர் உரை:

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.

('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னிடமுள்ள பொருளின் அளவை ஆராய்ந்து பார்க்காமல் அளவின்றிக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அவனது வளம் விரைவில் கெடும்.

மணக்குடவர் உரை:

தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும். மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.

Translation:

Beneficence that measures not its bound of means,

Will swiftly bring to nought the wealth on which it leans.

Explanation:

The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 479:

"அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்."

மு.வரதராசனார் உரை:

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் சொத்தின் மதிப்பை அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனின் வாழ்க்கை, இருப்பது போல் காட்சி தந்து இல்லாமல் அழிந்துவிடும்.

பரிமேலழகர் உரை:

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப வாழமாட்டா தான் வாழ்க்கைகள் : உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி, மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும் இன்றிக் கெட்டுவிடும்.

(அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின் சுருக்கக்கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும் வாழ்தல்.தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின், 'உளபோலத் தோன்றி'என்றார். முதலிற் செலவு மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

இருப்பது, இயற்றக்கூடியது, இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால், வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல் தோன்றினாலும்கூட இல்லாமல் மறைந்து போய்விடும்.

மணக்குடவர் உரை:

தன்வருவாய் அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலத் தோன்றி அதன்பின் இல்லையாகித் தோன்றாது கெடும். பின்பு ஆக்கம் தோன்றாதென்றவாறு. இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.

Translation:

Who prosperous lives and of enjoyment knows no bound,

His seeming wealth, departing, nowhere shall be found.

Explanation:

The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 478:

"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை."

மு.வரதராசனார் உரை:

பொருள் வரும் வழி (வருவாய்) சிறிதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை.

பரிமேலழகர் உரை:

ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.

('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

எல்லை கடந்த செலவு இல்லாமல் இருக்குமேயானால் வரவு, குறைவாக இருப்பதால் கேடு எதுவும் விளைவதில்லை.

மணக்குடவர் உரை:

பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின். இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

Translation:

Incomings may be scant; but yet, no failure there,

If in expenditure you rightly learn to spare.

Explanation:

Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 477:

"ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி."

மு.வரதராசனார் உரை:

தக்க வழியில் பிறர்க்கு கொடுக்கும் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:

எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

பரிமேலழகர் உரை:

ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.

(ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

வருவாய் அளவை அறிந்து, அதனை வகுத்து வழங்குவதே பொருளைச் சீராகக் காத்து வாழும் வழியாகும்.

மணக்குடவர் உரை:

பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால். இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

Translation:

With knowledge of the measure due, as virtue bids you give!

That is the way to guard your wealth, and seemly live.

Explanation:

Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 476:

"நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்."

மு.வரதராசனார் உரை:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலே ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு மரக்கிளையின் நுனியில் ஏறிவிட்டவர், அந்த அளவையும் கடந்து மேலும் ஏற முயன்றால், அம் முயற்சியே அவர் உயிருக்கு முடிவாகிவிடும்.

பரிமேலழகர் உரை:

கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் - ஒருமரக்கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம் ஊக்கத்தால் அவ்வளவினகை¢ கடந்து மேலும் ஏற ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் - அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.

('நுனிக்கொம்பர்' என்பது கடைக்கண் என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத்தொகை. பன்மை அறிவின்மைபற்றி இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை 'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித் தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின் அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும் செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும் பொருள்தோன்ற நின்றமையின் , இதுவும் மேலை அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்' என்றமையின் இதனான் வினைவலி அறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

தன்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போட்டுக் கொண்டு, எல்லை மீறிப் போகிற ஒருவர், நுனிக் கிளையில் ஏறியவர் அதற்கு மேலும் ஏறிட முயற்சி செய்தால் என்ன ஆவாரோ அந்தக் கதிக்கு ஆளாவார்.

மணக்குடவர் உரை:

ஒரு மரத்தின் நுனிக்கொம்பேறினவர் தம்மள வறிந்து வைத்துப் பின்னும் மேலேறுவாராயின் அஃது அவர்தம்முயிர்க்கு இறுதியாகிவிடும். இஃது அரசன் தன்னாற் செல்லலாமெல்லையளவும் சென்றால் பின்பு மீள வேண்டுமென்றது. இதுவும் ஒரு வலியறிதல்.

Translation:

Who daring climbs, and would himself upraise

Beyond the branch's tip, with life the forfeit pays.

Explanation:

There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 475:

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்."

மு.வரதராசனார் உரை:

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.

சாலமன் பாப்பையா உரை:

மயில்தோகைதானே என்று அதை அளவுக்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துபோகும்.

பரிமேலழகர் உரை:

பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய சகடமும் அச்சு முரியும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி மிகுத்து ஏற்றின்.

(உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்' என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்' என்று பலரோடு பகைகொள்வான், தான் வலியனே ஆயினும் அவர் தொக்கவழி வலியழியும் , என்னும் பொருள் தோன்ற நின்றமையின் இது பிறிது மொழிதல் என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி' என்பாரும், 'ஒட்டு' என்பாரும்உளர். ஒருவன் தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின், இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும் அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பீலி யேற்றிய சகடமும் அச்சுமுறியும்; அப்பீலியை மிகவும் அளவின்றியேற்றின். இஃது அரண் மிகுதல் நன்றென்றிருப்பார்க்குப் பகைமிகின் அரண் நில்லாதென்று கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மயிலிறகு ஏற்றி வைக்கப்பட்ட வண்டியும் அச்சு முறிவதாகிவிடும்; எப்போதும் என்றால், அம்மயிலிறகானது மிகவும் அதிக்கப்படுத்தப்பட்டு ஏற்றப்பட்டால் என்பதாம்.

Translation:

With peacock feathers light, you load the wain;

Yet, heaped too high, the axle snaps in twain.

Explanation:

The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 474:

"அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்."

மு.வரதராசனார் உரை:

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

பிறருடன் மனங்கலந்து பழகாமல், தன் சொந்த பலத்தையும் அறியாமல் தன்னைப் பெரிதாக எண்ணியவன் விரைவில் அழிவான்.

பரிமேலழகர் உரை:

ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் - விரையக் கெடும்.

(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன். இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பிறரொடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாமல், தனது வலிமையினையும் அறியாமல் தன்னையே பெருமையாக வியந்துகொண்டு பகைத்துக் கொண்ட அரசன் விரைவாகக் கெடுவான்.

Translation:

Who not agrees with those around, no moderation knows,

In self-applause indulging, swift to ruin goes.

Explanation:

He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 473:

"உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்."

மு.வரதராசனார் உரை:

தன்னுடைய வலிமை இவ்வளவு என அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

சாலமன் பாப்பையா உரை:

தம் ஆற்றலை அறியாமல், ஒரு வேகத்தில் செயலைச் செய்யத் தொடங்கித் தொடரமுடியாமல் இடையே விட்டுக் கெட்டவர் பலர்.

பரிமேலழகர் உரை:

உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.

('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.).

மணக்குடவர் உரை:

தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர். இது வலியறியாதார் கெடுவரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

முதன்மையாக உடைய தனது வலிமையினை அளந்தறியாமல் மன எழுச்சியால் தம்மைவிட வலியாரோடு போர் செய்தலைத் தொடங்கி முடிக்கப் பெறாமல் இடையே கெட்ட அரசர் பலருண்டு.

Translation:

Ill-deeming of their proper powers, have many monarchs striven,

And midmost of unequal conflict fallen asunder riven.

Explanation:

There are many who, ignorant of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 472:

"ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்."

மு.வரதராசனார் உரை:

தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயலாற்றுவார்க்கு, முடியாதது ஒன்றும் இல்லை.

பரிமேலழகர் உரை:

ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை.

('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை. இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தம்மால் முடியும் தொழிலையும், அதற்கு அறிய வேண்டிய வலிமையினையும் அறிந்து எப்போதும் அதனையே நினைவாகக் கொண்டு பகைமேல் செல்லும் அரசர்க்கு முடியாத பொருள் இல்லை.

Translation:

Who know what can be wrought, with knowledge of the means, on this,

Their mind firm set, go forth, nought goes with them amiss.

Explanation:

There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: வலியறிதல்.

 குறள் 471:

"வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்."

மு.வரதராசனார் உரை:

செயலின் வலிமையும் தன் வலிமையும் பகைவனுடைய வலிமையும் ,இருவருக்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவார் வலிமை என்னும் இவற்றை எல்லாம் நன்கு எண்ணிச் செயலைச் செய்க.

பரிமேலழகர் உரை:

வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.

(இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.).

மணக்குடவர் உரை:

செய்யும் வினையினது வலியும் தனக்கு உண்டான வலியும் பகைவனது வலியும் தனக்கும் பகைவர்க்கும் துணையாயினார் வலியும் எண்ணிப் பின்பு வினைசெய்க. இது வலியறியும் இடம் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தான் செய்யக் கருதிய தொழிலின் வலிமையினையும், அதனைச் செய்து முடிக்கின்ற தனது வலிமையினையும், பகைவனது வலிமையினையும், இருவர்க்கும் துணையாயினார் வலிமையினையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

Translation:

The force the strife demands, the force he owns, the force of foes,

The force of friends; these should he weigh ere to the war he goes.

Explanation:

Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 470:

"எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு."

மு.வரதராசனார் உரை:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர் உரை:

தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.

('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான். இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தொழிலினை முடிப்பதற்காக வேண்டித் தம் நிலைமைக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்வாராயின், உலகம் தம்மை இகழும். ஆதலால், இகழப்படாத வழிமுறைகளை நாடிச் செய்தல் வேண்டும்.

Translation:

Plan and perform no work that others may despise;

What misbeseems a king the world will not approve as wise.

Explanation:

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 469:

"நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை."

மு.வரதராசனார் உரை:

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

பரிமேலழகர் உரை:

நன்று ஆற்றல் உள்ளும் தவறு உண்டு - வேற்று வேந்தர்மாட்டு நன்றான உபாயம் செய்தற்கண்ணும் குற்றம் உண்டாம், அவரவர் பண்பு அறிந்து ஆற்றாக்கடை - அவரவர் குணங்களை ஆராய்ந்து அறிந்து அவற்றிற்கு இயையச் செய்யாவிடின்.

(நன்றான உபாயமாவது: கொடுத்தலும் இன்சொல் சொல்லுதலுமாம். அவை யாவர் கண்ணும் இனியவாதல் சிறப்புடைமையாயின், உம்மை சிறப்பு உம்மை. அவற்றை அவரவர் பண்பு அறிந்து ஆற்றாமையாவது, அவற்றிற்கு உரியர் அல்லாதார்கண்ணே செய்தல். தவறு, அவ்வினை முடியாமை.).

மணக்குடவர் உரை:

நன்மையைச் செய்யுமிடத்தினும் குற்றமுண்டாம்; அவரவர் குணமறிந்து செய்யாத விடத்து.

இதுவுமோரெண்ணம்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அவரவர் குணங்களை ஆராய்ந்து அவற்றிற்கேற்பச் செய்யாமற் போனால், பிறர்க்கு நல்லவற்றையே செய்தாலும் குற்றம் உண்டாகிவிடும்.

Translation:

Though well the work be done, yet one mistake is made,

To habitudes of various men when no regard is paid.

Explanation:

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 468:

"ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்."

மு.வரதராசனார் உரை:

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

பரிமேலழகர் உரை:

ஆற்றின் வருந்தா வருத்தம் - முடியும் உபாயத்தால் கருமத்தை முயலாத முயற்சி, பலர் நின்று போற்றினும் பொத்துப்படும் - துணைவர் பலர் நின்று புரைபடாமல் காப்பினும் புரைபடும்.

(முடியும் உபாயத்தான் முயறலாவது கொடுத்தலைப் பொருள் நசையாளன் கண்ணும், இன்சொல்லைச் செப்பம் உடையான், மடியாளன், முன்னே பிறரொடு பொருது நொந்தவன் என இவர்கண்ணும், வேறுபடுத்தலைத் துணைப்படையாளன் தன் பகுதியோடு பொருந்தாதான் என இவர்கண்ணும், ஒறுத்தலை இவற்றின் வாராத வழி இவர்கண்ணும், தேறப்படாத கீழ்மக்கள் கண்ணும், செய்து வெல்லுமாற்றான் முயறல். புரைபடுதல்: கருதிய நன்மையன்றிக் கருதாத தீமை பயத்தல். உபாயத்தது சிறப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை:

மேற்கூறிய நெறியினாலே முயலாத பொருள், பலர் நின்று காப்பினும் புரைபடும். இஃது எண்ணிச் செய்யாதது தப்பு மென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செய்து முடிக்க வேண்டிய வழியினால் தொழிலினை முயலாத முயற்சி, துணையாகப் பலர் இருந்து குற்றம் வராமல் காப்பாற்றினாலும் குற்றம் உடையதாகவே முடியும்.

Translation:

On no right system if man toil and strive,

Though many men assist, no work can thrive.

Explanation:

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 467:

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு."

மு.வரதராசனார் உரை:

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

பரிமேலழகர் உரை:

கருமம் எண்ணித் துணிக - செய்யத்தக்க கருமமும் முடிக்கும் உபாயத்தை எண்ணித் தொடங்குக, துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு - தொடங்கி வைத்துப் பின் எண்ணக் கடவோம் என்று ஒழிதல் குற்றம் ஆதலான்.

(துணிவுபற்றி நிகழ்தலின் துணிவு எனப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உபாயம் என்பது அவாய்நிலையான் வந்தது. அது , கொடுத்தல், இன்சொல் சொல்லல், வேறுபடுத்தல், ஒறுத்தல் என நால்வகைப்படும். இவற்றை வடநூலார் தான, சாம, பேத , தண்டம் என்ப. அவற்றுள் முன்னைய இரண்டும் ஐவகைய. ஏனைய மூவகைய, அவ்வகைகளெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். இவ்வுபாயமெல்லாம் எண்ணாது தொடங்கின் அவ்வினை மாற்றானால்விலக்கப்பட்டு முடியாமையானும், இடையின் ஒழிதல்ஆகாமையானும் அரசன் துயருறுதலின், அவ்வெண்ணாமையை 'இழுக்கு'என்றார். செய்வனவற்றையும் உபாயம் அறிந்தே தொடங்குகஎன்பதாம்.).

மணக்குடவர் உரை:

ஒருவினை செய்யத் துணிவதன் முன்னே அதனால் வரும் பயனை எண்ணிப் பின்பு செய்யத் துணிக: துணிந்தபின் எண்ணுவோமென்றல் தப்பாமாதலான்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தொழிலினை, முடிக்கும் திறத்தினை நன்கு எண்ணிப் பார்த்துத் தொடங்குதல் வேண்டும். தொழிலினைத் தொடங்கிய பிறகு முடிக்கும் திறத்தினை எண்ணுவோம் என்பது குற்றமேயாகும்.

Translation:

Think, and then dare the deed! Who cry,

'Deed dared, we'll think,' disgraced shall be.

Explanation:

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 466:

"செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்."

மு.வரதராசனார் உரை:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

பரிமேலழகர் உரை:

செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.

(செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.

இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தான் செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் ஒருவன் கெட்டுவிடுவான். செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாதிருப்பதாலும் கெட்டுவிடுவான்.

Translation:

'This ruin if man do an un befitting thing;

Fit things to leave undone will equal ruin bring.

Explanation:

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to do.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 465:

"வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு."

மு.வரதராசனார் உரை:

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

பரிமேலழகர் உரை:

வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம்.

(அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

மேற்சொன்னவகைகளில் போக்கறச் சூழாதே போர்கருதி யெழுதல் பகைஞராகிய விதையை நிலத்தின்கண்ணே இடுவதொரு நெறி.

இது பகைவர்க்கு ஆக்க முண்டாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

வினைமேல் சென்றால் நிகழும் திறங்களையெல்லாம் முழுவதும் எண்ணாமல் சிலவற்றை எண்ணியவுடனே தொழில்மேல் செல்லுதல், பகைவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்யுமொரு வழி.

Translation:

With plans not well matured to rise against your foe,

Is way to plant him out where he is sure to grow!.

Explanation:

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 464:

"தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்."

மு.வரதராசனார் உரை:

கல்லாதவனுடைய இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

பரிமேலழகர் உரை:

தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.

(தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தௌ¤வுள் வழித் தொடங்குக என்பதாம்.).

மணக்குடவர் உரை:

ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தமக்கு இழிவு எனப்படும் குற்றம் உண்டாவதற்கு அஞ்சுபவர்கள், இனத்துடனும் தனித்தும் ஆராய்ந்து துணியப்படாத தொழிலைத் தொடங்க மாட்டார்கள்.

Translation:

A work of which the issue is not clear,

Begin not they reproachful scorn who fear.

Explanation:

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 463:

"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்."

மு.வரதராசனார் உரை:

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

பரிமேலழகர் உரை:

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார்.

('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.).

மணக்குடவர் உரை:

தமக்கு ஆக்கம் உண்டாகவேண்டி முன்புண்டான முதலும் இழக்க வரும் வினையைச் செய்ய நினையார் அறிவுடையார்.

இது பிற்பயவாத வினை செய்யலாகாதென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பின்பு வரக்கூடிய ஊதியத்தினைக் கருதி முன்பு பெற்றுள்ள முதலையும் இழப்பதற்குக் காரணமான தொழிலினை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.

Translation:

To risk one's all and lose, aiming at added gain,

Is rash affair, from which the wise abstain.

Explanation:

The Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 462:

"தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்."

மு.வரதராசனார் உரை:

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும்எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

பரிமேலழகர் உரை:

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.

(ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத்தகும் தொழிலினை ஆராய்ந்து எண்ணிச் செய்து முடிக்க வல்லவர்களுக்கு அடைவதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை.

Translation:

With chosen friends deliberate; next use the private thought;

Then act. By those who thus proceed all works with ease are wrought.

Explanation:

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: தெரிந்துசெயல்வகை.

 குறள் 461:

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்."

மு.வரதராசனார் உரை:

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

பரிமேலழகர் உரை:

அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க.

(உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம'¢ என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.).

மணக்குடவர் உரை:

வினை செய்து முடித்தற்கு அழியும் பொருளும் அது செய்து முடித்தாலுளதாகும் பொருளுமாய்நின்று அப்பொருளினாற் பின்புண்டாய் வரும் பயனும் எண்ணிப் பின்பு வினைசெய்ய வேண்டும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தொழில் செய்யும்போது, அப்போது அதனால் வரும் அழிவினையும், பிறகு ஆவதனையும், ஆனபிறகு தரும் ஊதியத்தினையும் சீர்தூக்கிப் பார்த்துச் செய்தல் வேண்டும்.

Translation:

Expenditure, return, and profit of the deed

In time to come; weigh these- than to the act proceed.

Explanation:

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 460:

"நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்."

மு.வரதராசனார் உரை:

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

பரிமேலழகர் உரை:

நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.

(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை. இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவனுக்கு நல்ல இனத்தினைவிட மேற்பட்ட துணையும் இல்லை. தீய இனத்தினைவிட மிக்க பகையும் இல்லை.

Translation:

Than good companionship no surer help we know;

Than bad companionship nought causes direr woe.

Explanation:

There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 459:

"மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து."

மு.வரதராசனார் உரை:

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும், அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனுக்கு மனநலத்தால் மறுமை இன்பம் கிடைக்கும். அதுவுங்கூட இனநலத்தால் வலிமை பெறும்.

பரிமேலழகர் உரை:

மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,

(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.).

மணக்குடவர் உரை:

மன நலத்தினாலே மறுமைப் பயன் நன்றாகும். அம்மனத்தின் நன்மையும் இனநன்மையாலே தீத்தொழிலிற் செல்லாமற் காவலாதலையுடைத்து. இது மறுமைக்குத் துணையாமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவனுக்கு மனம் நன்றாக இருந்தால் மறுமை இன்பம் உண்டாகும். அதற்கு அந்தச் சிறப்புத் தானும் இனம் நன்றாக இருந்தால் பாதுகாப்பான வலிமையினை உடையதாகும்.

Translation:

Although to mental goodness joys of other life belong,

Yet good companionship is confirmation strong.

Explanation:

Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 458:

"மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து."

மு.வரதராசனார் உரை:

மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை:

மனநலத்தைச் சிறப்பாகப் பெற்றவரே ஆயினும், நல்ல குணம் உடையவர்க்கு இனநலம் பாதுகாப்பாக இருக்கும்.

பரிமேலழகர் உரை:

மனநலம் நன்கு உடையராயினும் மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும் சான்றோர்க்குஇனநலம் ஏமாப்பு உடைத்து அமைந்தார்க்கு இனநன்மை அதற்குவலியாதலையுடைத்து

('நன்கால்' என்னும் மூன்றன் உருபுவிகாரத்தால் தொக்கது. அந் நல்வினை உள்வழியும்மனநலத்தை வளர்த்து வருதலின் அதற்கு ஏமாப்பு உடைத்தாயிற்று.

மணக்குடவர் உரை:

மன நன்மை மிக வுடையராயினும் இன நன்மை யுடைமை சான்றோர்க்குக் காவலாதலையுடைத்து. இஃது இனநலம் அல்லாராயின் பிறரா லிகழப்படுவராதலான் இனநலம் இகழ்ச்சி வாராமற் காக்குமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மனம் நன்றாக இருப்பதனை நல்லபடியாகத் தாமே தம் பிறவியிலேயே உடையவராக இருந்தாலும், நிறைகுணம் பெற்ற  பெரியோர்களுக்கு சேர்ந்த இனம் நன்றாக இருப்பது, காப்பான வலிமை உடையதாகும்.

Translation:

To perfect men, though minds right good belong,

Yet good companionship is confirmation strong.

Explanation:

Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 457:

"மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்."

மு.வரதராசனார் உரை:

மனதின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும், இனத்தின் தன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலைபெற்று வரும் உயிர்களுக்கு மனநலம் சிறந்த செல்வம் தரும்; இன நலமோ எல்லாப் புகழையும் தரும்.

பரிமேலழகர் உரை:

மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம்(தரும்) - நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும், இனநலம் எல்லாப் புகழும் தரும் - இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.

('மன், உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும் , புகழ் கொடுத்தற்கு உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார்.மேல் மனநன்மை இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு , அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, 'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்' என , அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

மனநன்மை நிலைபெற்ற உயிர்க்கு ஆக்கமாவதுபோல, இன நன்மை எல்லாவற்றானும் வரும் புகழினைத் தரும். இஃது எல்லாப் புகழுந் தருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

நிலைபெற்ற மக்களுயிர்க்கு மனம் நன்றாக இருப்பது செல்வத்தினைத் தரும். இனமானது நன்றாக இருப்பதானது எல்லாப் புகழினையும் கொடுக்கும்.

Translation:

Goodness of mind to lives of men increaseth gain;

And good companionship doth all of praise obtain.

Explanation:

Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 456:

"மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை."

மு.வரதராசனார் உரை:

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தால் நல்லவர்க்கு அவர் விட்டுச் செல்வனவே நல்லவை; இனத்தால் நல்லவர்க்கோ நல்லதாக அமையாத செயல் என்று எதுவுமே இல்லை.

பரிமேலழகர் உரை:

மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் - மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும், இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம் தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.

(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம் நன்று ஆகும்'. என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்' என்றும் கூறினார்.) .

மணக்குடவர் உரை:

மனநல்லார்க்குப் பின்பு நிற்கும் காணம் முதலான பொருள்கள் நல்லவாம்: இன நல்லார்க்கு நன்றாகாத தொரு வினையும் இல்லை.

இது மேலதற்குப் பயன் கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மனம் தூய்மையானவர்களுக்கு எஞ்சி நிற்பதாகிய எச்சம் சிறப்பானதாக அமையும். இனம் தூய்மையானவர்களுக்கு நன்றாகாத செயல் எதுவுமே இல்லை.

Translation:

From true pure-minded men a virtuous race proceeds;

To men of pure companionship belong no evil deeds.

Explanation:

To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.

Monday, September 21, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 455:

"மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்."

மு.வரதராசனார் உரை:

மனத்தின் தூய்மை செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்ப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தூய்மை, செய்யும் செயல் சிறப்பு ஆகிய இரண்டும், ஒருவன் சேர்ந்துள்ள இனத்தின் தூய்மையை ஆதாரமாகக் கொண்டே பிறக்கும்.

பரிமேலழகர் உரை:

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் - அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய மனம் தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையும் ஆகிய இரண்டும், இனம் தூய்மை தூவா வரும் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக் கோடாக உளவாம்.

(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல். செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல் 'தூவறத் துறந்தாரை (கலித். நெய்த ,1 )என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு, அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

மனம் நன்றாதலும் செய்வினை நன்றாதலுமாகிய இரண்டும். இனம் நன்றாதலைப் பற்றி வரும். இனிச் சேராமையான் வரும் நன்மை கூறுவார் இவையிரண்டும் நன்றாம் என்று கூறினார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மனம் தூய்மையுடையவனாகும் தன்மையும், செய்யும் தொழில் தூய்மையுடையதாகும் தன்மையும் ஆகிய இரண்டும் அவன் சேர்ந்த இனம் தூய்மையாயுள்ள தன்மையினைப் பற்றுக் கோடாகக் கொண்டு வருவனவாகும்.

Translation:

Both purity of mind, and purity of action clear,

Leaning no staff of pure companionship, to man draw near.

Explanation:

Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 454:

"மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு."

மு.வரதராசனார் உரை:

ஒருவனுக்கு சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக் காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவு ஒருவன் மனத்துள் இருப்பது போலத் தோன்றும்; உண்மையில் அது அவன் சேர்ந்துள்ள இனத்தின்பால் இருந்து பெறப்படுவதே ஆகும்.

பரிமேலழகர் உரை:

அறிவு - அவ் விசேட உணர்வு, ஒருவற்கு மனத்து உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி , இனத்து உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம் .

(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும் , பின் நோக்கிய வழிப்பயின்ற இனத்துளதாயும் இருத்தலின் 'காட்டி' என இறந்த காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்' மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது'? என்பாரை நோக்கி ஆண்டு புலப்படும் துணையே உள்ளது: அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது).

மணக்குடவர் உரை:

ஒருவனுக்கு உண்டாகும் அறிவு முற்பட மனத்துள்ளது போலத் தோற்றிப் பின் தான் சேர்ந்த இனத்தினுண்டான அறிவாகும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஒருவனுடைய சிறப்பான உணர்வானது தனது மனத்தில் உள்ளது போலப் புலப்படுத்தி உண்மையில் அவன் சேர்ந்த இனத்தினாலே அமைவதாகும்.

Translation:

Man's wisdom seems the offspring of his mind;

'This outcome of companionship we find.

Explanation:

Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 453:

"மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்."

மு.வரதராசனார் உரை:

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:

மக்களுக்கு இயல்பான அறிவு அவர்தம் மனததால் உண்டாகும்; ஆனால், ஒருவன் இப்படிப்பட்டவன் என்று பெரியோர் சொல்லும் சொல் அவன் சார்ந்த இனம் காரணமாகவே உண்டாகும்.

பரிமேலழகர் உரை:

மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப் பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம் இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம் - 'இவன் இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாம்.

(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை மனத்தான் ஆம் என்றும், செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின், அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார். உவமையளவை கொள்ளாது 'அத் திரிபும்' மனத்தான் ஆம் என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

மாந்தர்க்கு அறிவு மனத்தினானே யுண்டாம், ஆயினும் தான் சேர்ந்த இனத்தினால் இனியனல்லன் என்று பிறரால் பழிக்கப்படுஞ் சொல் உண்டாம். இது பிறரால் பழிக்கப்படுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மாந்தர்க்குப் பொது உணர்வு மனம் காரணமாக உண்டாகும். இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாகிவிடும்.

Translation:

Perceptions manifold in men are of the mind alone;

The value of the man by his companionship is known.

Explanation:

The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 452:

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு."

மு.வரதராசனார் உரை:

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தான் சேர்ந்த நிலத்தின் தன்மையால் நீர் தன் இயல்பை இழந்து, நிலத்தின் இயல்பாகவே மாறிவிடும்; மனிதரின் அறிவும் அவர் சேர்ந்த இனத்தின் இயல்பாகவே ஆகிவிடும்.

பரிமேலழகர் உரை:

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.

(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.) .

மணக்குடவர் உரை:

நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

நீரானது, தான் சேர்ந்த நிலத்தினாலே மாறுபட்டு அந்த நிலத்தின் தன்மையதாகிவிடும். அதுபோல, மனிதர்க்கு அறிவானது தாம் சேர்ந்த இனத்தினாலே வேறுபட்டு அந்த இனத்தின் தன்மையதாகிவிடும்.

Translation:

The waters' virtues change with soil through which they flow;

As man's companionship so will his wisdom show.

Explanation:

As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: சிற்றினஞ்சேராமை.

 குறள் 451:

"சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்."

மு.வரதராசனார் உரை:

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும், சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

சாலமன் பாப்பையா உரை:

தீய குணத்தாரோடு சேரப் பெரியோர் அஞ்சுவர்; சிறியாரோ அவர்களைத் தம் உறவாகவே கருதி விடுவர்.

பரிமேலழகர் உரை:

பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.

'(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர். இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பெரியோர் இயல்பு கீழான இனத்தைக் கண்டால் அஞ்சி நிற்பதாகும். சிறியோர் இயல்பு அந்த இனத்தைக் தனக்குச் சுற்றமாக எண்ணும்.

Translation:

The great of soul will mean association fear;

The mean of soul regard mean men as kinsmen dear.

Explanation:

(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 450:

"பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்."

மு.வரதராசனார் உரை:

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

பரிமேலழகர் உரை:

பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.

(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

பெரியார்களது நட்பினைக் கொள்ளாமல் விட்டுவிடுதல் என்பது, பலரோடும் பகைமையினைக் கொள்ளுவதை விடப் பத்து மடங்கு தீமையுடையதாகும்.

Translation:

Than hate of many foes incurred, works greater woe

Ten-fold, of worthy men the friendship to forego.

Explanation:

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 449:

"முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை."

மு.வரதராசனார் உரை:

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

பரிமேலழகர் உரை:

முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.

(முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.).

மணக்குடவர் உரை:

முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

முதற்பொருள் இல்லாத வணிகர்களுக்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாகும். அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்களுக்கு அதனால் வரும் உறுதியான நிலை இல்லையாகும்.

Translation:

Who owns no principal, can have no gain of usury;

Who lacks support of friends, knows no stability.

Explanation:

The There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 448:

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்."

மு.வரதராசனார் உரை:

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

பரிமேலழகர் உரை:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - சுழறுதற்கு உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின் காவலற்ற அரசன், கெடுப்பார்இலானும் கெடும் - பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே கெடும்.

('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு. கெடுப்பார் உளராவர் என்பது தோன்ற, 'இலானும்' என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.).

மணக்குடவர் உரை:

கழறுவாரை யில்லாத காவலில்லாத அரசன் தன்னைப் பகைவராய் வந்து கெடுப்பார் இல்லையாயினும் தான் வேண்டியவாறொழுகிக் கெடும். இஃது உயிர்க்குக் கேடு வருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.

Translation:

The king with none to censure him, bereft of safeguards all,

Though none his ruin work, shall surely ruined fall.

Explanation:

The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 447:

"இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்."

மு.வரதராசனார் உரை:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா உரை:

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?.

பரிமேலழகர் உரை:

இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?

(தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர். இது கேடில்லை யென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் தன்மையுடைய பெரியார்களை, இவர்கள் தமக்குச் சிறந்தார் என்று கொள்ளுபவர்களைக் கெடுக்கும் பெருமையுடைய பகைவர் யாவர் உளர்?.

Translation:

What power can work his fall, who faithful ministers

Employs, that thunder out reproaches when he errs.

Explanation:

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 446:

"தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்."

மு.வரதராசனார் உரை:

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

பரிமேலழகர் உரை:

தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.

(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.).

மணக்குடவர் உரை:

தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.

இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தகுதியான பெரியார்களின் துணையினை உடையவனாகித் தானும் அறிந்து நடந்துகொள்ள வல்லவர்க்குப் பகைவர் செய்யக் கூடியதொரு துன்பம் இல்லையாகும்.

Translation:

The king, who knows to live with worthy men allied,

Has nought to fear from any foeman's pride.

Explanation:

There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 445:

"சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்."

மு.வரதராசனார் உரை:

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

பரிமேலழகர் உரை:

சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அரசனது பாரம் தன்னைச் சூழ்ந்துள்ள பெரியார்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால், அவன் அவ்வாறு சூழ்ந்துள்ளவர்களை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும்.

Translation:

The king, since counsellors are monarch's eyes,

Should counsellors select with counsel wise.

Explanation:

As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 444:

"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை."

மு.வரதராசனார் உரை:

தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

பரிமேலழகர் உரை:

தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை.

(பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.).

மணக்குடவர் உரை:

தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அறிவு முதலியவற்றினால் தம்மைவிட மிகுந்தவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கொண்டு நடந்து கொள்ளுதல் எல்லா வலிமைகளைக் காட்டிலும் தலைமையானதாகும்.

Translation:

To live with men of greatness that their own excels,

As cherished friends, is greatest power that with a monarch dwells.

Explanation:

So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 443:

"அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்."

மு.வரதராசனார் உரை:

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

பரிமேலழகர் உரை:

பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.

(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.).

மணக்குடவர் உரை:

செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.

பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

ஆற்றல் மிகுந்த பெரியார்களை அவர் மகிழ்வன செய்து தமக்குச் சிறந்த துணையாகக் கொள்ளுதல், அரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் அரிதானதாகும்.

Translation:

To cherish men of mighty soul, and make them all their own,

Of kingly treasures rare, as rarest gift is known.

Explanation:

To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 442:

"உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்."

மு.வரதராசனார் உரை:

எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

பரிமேலழகர் உரை:

உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத் தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி ; உறாமை முற்காக்கும் பெற்றியார் - பின் அப்பெற்றியன வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல தன்மையினையுடையாரை; பேணிக்கொளல் - அரசன் அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க. (தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது இன்மை மிகுதிகளானும், காற்று தீ, பிணி என்ற இவற்றானும் வருவன. அவை கடவுளரையும் தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான் நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன: பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார் என்றிவர்களான் வருவன. அவை சாம பேத தான தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால் நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான் வருவனவற்றை உற்பாதங்களால் அறிந்து அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல் என்பனவற்றுள் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால் காத்தலும் ஆம் ; ஆகவே புரோகிதரையும் அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் - குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் - குறிப்பின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும் பெரியாரது இலக்கணமும்,அவரைத் துணையாகக் கோடல் வேண்டும் என்பதூஉம்,கொள்ளுமாறும் கூறப்பட்டன.) .

மணக்குடவர் உரை:

அரசர் தமக்குற்ற நோயை விடுவித்துப் பின்பு துன்பமுறாமல் முன்னே காக்கவல்ல தன்மையுடையாரை விரும்பிக் கொள்க.

பெற்றியாரென்று பொதுப்படக்கூறினமையால், இது மந்திரிகளைக் கூட்டுமாறு கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தனக்குவரும் துன்பங்களை நீக்கும் வழியறிந்து நீக்கி, பிறகு அவ்வாறான துன்பங்கள் தனக்கு வாராதபடி முன் அறிந்து காக்கவல்ல தன்மையுடையவர்களை அவர்கள் மகிழ்வதைச் செய்து துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

Translation:

Cherish the all-accomplished men as friends,

Whose skill the present ill removes, from coming ill defends.

Explanation:

Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.