குறள் 245:
"அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி."
மு.வரதராசனார் உரை:
அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா உரை:
அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
பரிமேலழகர் உரை:
அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை - அருளுடையார்க்கு இம்மையினும் ஒரு துன்பம் உண்டாகாது, வளி வழங்கும் மல்லல்மா ஞாலம் கரி - அதற்குக் காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாழ்வார் சான்று. ( சான்று ஆவார் தாம் கண்டு தேறிய பொருளைக் காணாதார்க்குத் தேற்றுதற்கு உரியவர். அருள் ஆள்வார்க்கு அல்லல் உண்டாக ஒரு காலத்தும் ஒருவரும் கண்டறிவார் இன்மையின், இன்மை முகத்தான் ஞாலத்தார் யாவரும் சான்று என்பார். 'வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி' என்றார். எனவே, இம்மைக்கண் என்பது பெற்றாம். 'ஞாலம்' ஆகு பெயர். இவை மூன்று பாட்டானும் அத்துணையுடையார்க்கு இருமையினும் துன்பம் இல்லாமை கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
அருளுடையார்க்கு அல்லலில்லை: அதற்குச் சான்று காற்றியங்குகின்ற வளப்பத்தினை யுடைய பெரிய வுலகம். இஃது அருளுடையார்க்கு அல்லலின்மை உலகத்தார்மாட்டே காணப்படுமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
அருளுடையவர்களுக்குத் துன்பம் உண்டாகாது. காற்று இயங்குகின்ற வளப்பத்தினையுடைய பெரிய ஞாலத்தில் வாழ்கின்ற மக்களே அதற்குச் சான்றாவார்கள்.
Translation:
The The teeming earth's vast realm, round which the wild winds blow,
Is witness, men of 'grace' no woeful want shall know.
Explanation:
This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kind-hearted.
No comments:
Post a Comment