Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 12, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: துறவு.

 குறள் 349:

"பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்."

மு.வரதராசனார் உரை:

இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.

பரிமேலழகர் உரை:

பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும். (காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். ' அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5)என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும்அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.).

கலைஞர் மு.கருணாநிதி உரை:

பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.

மணக்குடவர் உரை:

ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும். இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

Translation:

When that which clings falls off, severed is being's tie;

All else will then be seen as instability.

Explanation:

At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen.

No comments:

Post a Comment