Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, September 11, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை.

 குறள் 304:

"நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற."

மு.வரதராசனார் உரை:

முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

சாலமன் பாப்பையா உரை:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பரிமேலழகர் உரை:

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

முகத்தின்கண் தோன்றும் மலர்ச்சியான நகைப்பினையும் மனத்தில் தோன்றும் மகிழ்ச்சியினையும் கொன்றுவிடுகின்ற கோபத்தைவிட வேறு பகையும் உண்டோ?.

Translation:

Wrath robs the face of smiles, the heart of joy,

What other foe to man works such annoy?.

Explanation:

Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?.

No comments:

Post a Comment