Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 3, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.

 குறள் 241:

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள."

மு.வரதராசனார் உரை:

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.

பரிமேலழகர் உரை:

[அஃதாவது, தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை. இல்லறத்திற்கு அன்புடைமைபோல இது துறவறத்திற்குச் சிறந்தமையின் முன் கூறப்பட்டது.)


செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் - செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வமாவது அருளான்வரும் செல்வம், பொருட் செல்வம் பூரியார் கண்ணும் உள - அஃது ஒழிந்த பொருளான் வரும்செல்வங்கள் இழிந்தார்கண்ணும் உளவாம் ஆகலான். ( அருளான் வரும் செல்வமாவது, உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுதல். உயர்ந்தார்கண்ணே அல்லது இல்லாத அருட்செல்வமே சிறப்புடைய செல்வம், ஏனை நீசர்கண்ணும் உளவாம்பொருட் செல்வங்கள் சிறப்பு இல என்பதாம்.).

மணக்குடவர் உரை:

செல்வத்துள் வைத்துச் செல்வமாவது அருளுடைமையாகிய செல்வமாம்; பொருட்செல்வமானது கீழாயினோர்மாட்டும் உளவாதலால். இஃது அருள்நிலை கூறிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செல்வங்களுக்குள் சிறந்த செல்வமாவது அருளால் வரும் செல்வமேயாகும். அதுவல்லாமல், பிற செல்வங்கள் பொருளால் வருபவை. இழந்தவர்களிடத்திலும் இருப்பதாகும்.

Translation:

Wealth 'mid wealth is wealth 'kindliness';

Wealth of goods the vilest too possess.

Explanation:

The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men.

No comments:

Post a Comment