குறள் 314:
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்."
மு.வரதராசனார் உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.
பரிமேலழகர் உரை:
இன்னா செய்தாரை ஒறுத்தல் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தாரைத் துறந்தார் ஒறுத்தலாவது: அவர் நாண நல் நயம் செய்துவிடல் - அவர் தாமே நாணுமாறு அவர்க்கு இனிய உவகைகளைச் செய்து அவ்விரண்டனையும் மறத்தல். (மறவாவழிப் பின்னும் வந்து கிளைக்கும் ஆகலின் , மறக்கற்பால ஆயின. அவரை வெல்லும் உபாயம் கூறியவாறு . இவை மூன்று பாட்டானும் செற்றம் பற்றிச் செய்தல் விலக்கப்பட்டது.).
மணக்குடவர் உரை:
இன்னாதன செய்தாரை ஒறுக்குமாறு என்னையெனின், அவர் நாணும்படியாக நல்ல நயமுடையவற்றைச் செய்துவிடுக. இஃது ஒறுக்கும் நெறி கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தமக்குத் துன்பம் செய்தவர்களைத் துறந்தவர்கள் தண்டித்தல் என்பதானது, அத்துன்பம் செய்தவர்கள் தாமே நாணம் அடையும்படி அவர்கட்கு இனிமையானவற்றைச் செய்து அவ்விரண்டினையும் மறந்து விடுதலாகும்.
Translation:
To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.
Explanation:
The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.
No comments:
Post a Comment