Tirukkuṛaḷ - திருக்குறள்

Wednesday, September 2, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.

 குறள் 224:

"இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு."

மு.வரதராசனார் உரை:

பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

சாலமன் பாப்பையா உரை:

கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

பரிமேலழகர் உரை:

இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும் அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும் விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது. 'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145) கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது பெறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு மெனின், இரந்து வந்தவன் தான் வேண்டியது பெற்றதனானே இனிதான முகங் காணுமளவும். இது கொடுக்குங்கால் தாழாது கொடுக்க வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

யாசிப்பது மட்டும் அல்லாமல் யாசிக்கப்படுவதும் இன்பம் தருவது அல்ல; எதுவரைக்கும் என்றால், ஒரு பொருளை யாசிப்பவரது இனிய முகத்தினைக் காணுகின்றவரைக்கும் என்பதாகும்.

Translation:

The suppliants' cry for aid yields scant delight,

Until you see his face with grateful gladness bright.

Explanation:

To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.

No comments:

Post a Comment