Tirukkuṛaḷ - திருக்குறள்

Thursday, September 3, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அருளுடைமை.

 குறள் 249:

"தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்."

மு.வரதராசனார் உரை:

அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

பரிமேலழகர் உரை:

அருளாதான் செய்யும் அறம் தேரின் - உயிர்கள் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்று - ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

உயிர்களிடத்தில் அருளில்லாதவன் செய்கின்ற அறத்தினை ஆராய்ந்து பார்த்தால், ஞானம் இல்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தது போன்றதாகும்.

Translation:

When souls unwise true wisdom's mystic vision see,

The 'graceless' man may work true works of charity.

Explanation:

If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

No comments:

Post a Comment