Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, September 11, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: இன்னாசெய்யாமை.

 குறள் 312:

"கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்."

மு.வரதராசனார் உரை:

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நம்மீது கோபம் கொண்டு தீமை செய்தாலும், பதிலுக்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.

பரிமேலழகர் உரை:

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.).

மணக்குடவர் உரை:

தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தம்மேல் கோபம் கொண்டு ஒருவன் துன்பம் தருபவற்றைச் செய்தான் என்றாலும் மீண்டும் தாம் அவனுக்குத் துன்பம் செய்யாமை மாசற்ற தவசிகளின் துணிவாகும்.

Translation:

Though malice work its worst, planning no ill return, to endure,

And work no ill, is fixed decree of men in spirit pure.

Explanation:

It is the determination of the spotless not to do evil, even in return, to those who have cherished enmity and done them evil.

No comments:

Post a Comment