குறள் 325:
"நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை."
மு.வரதராசனார் உரை:
வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
சாலமன் பாப்பையா உரை:
வாழ்க்கை நிலைக்கு அஞ்சி மனத் துறவு கொண்டவருள் எல்லாம் கொலை செய்வதால் வரும் பாவத்திற்கு அஞ்சி வாழ்பவன் உயர்ந்தவன் ஆவான்.
பரிமேலழகர் உரை:
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத் துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப் பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம் துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்' என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
மனைவாழ்க்கையில் நிற்றலை யஞ்சித் துறந்தவரெல்லாரினும் கொலையை யஞ்சிக் கொல்லாமையைச் சிந்திப்பான் தலைமையுடையவன்; இல்வாழ்க்கையில் நிற்பினும். இஃது எல்லாத் துறவினும் நன்றென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
பிறப்பு என்ற நிலையினை அஞ்சி ஆசையெல்லாம் விட்ட நீத்தார்களுள் எலாம் கொலைத் தீமையினை அஞ்சிக் கொல்லாமையாகிய அறத்தினை மறவாதவன் உயர்ந்தவனாவான்.
Translation:
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Explanation:
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
No comments:
Post a Comment