Tirukkuṛaḷ - திருக்குறள்

Friday, September 11, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: வெகுளாமை.

 குறள் 302:

"செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற."

மு.வரதராசனார் உரை:

பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

பரிமேலழகர் உரை:

சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை:

இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

கோபம் தன்னைவிட வலியவர்கள் மேல் உண்டாகுமானால் தனக்கே தீமையாகும். மற்ற எளியவர்கள் மீது சென்றால் அதனைவிடத் தீமையானது பிற இல்லையாகும்.

Translation:

Where power is none to wreak thy wrath, wrath important is ill;

Where thou hast power thy will to work, 'this greater, evil still.

Explanation:

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

No comments:

Post a Comment