Tirukkuṛaḷ - திருக்குறள்

Tuesday, September 15, 2020

Tirukkural - குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்தல்.

 குறள் 366:

"அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா."

மு.வரதராசனார் உரை:

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

பரிமேலழகர் உரை:

ஒருவனை வஞ்சிப்பது அவா - மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவி வழியால் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே விழித்துக் கெடுக்கவல்லது அவா, அஞ்சுவதே அறன் - ஆகலான், அவ்வவாவை அஞ்சிக் காப்பதே துறவறமாவது. (ஓரும் என்பன அசைநிலை, அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மை வேண்டலை ஒழிந்து பராக்கால் காவானாயின் , அஃது இடமாக அவன் அறியாமல் புகுந்து பழைய இயற்கையாய் நின்று, பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமல் பரிகரித்தல். இதனால், அவாவின் குற்றமும் அதனைக் காப்பதே அறம்என்பதூஉம் கூறப்பட்டன.).

மணக்குடவர் உரை:

ஒருவனை வஞ்சனை செய்வது ஆசை: ஆதலால் அதனை அஞ்சுவதே அறம். வஞ்சனை செய்தல்- நன்றி செய்வாரைப் போல முன்னே நின்று, பின்னே தீக்கதியுள் உய்த்தல். இஃது ஆசையின்மை வேண்டுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

மெய்யுணர்தல் முதலியன எல்லாம் எய்தி அவற்றால் வீடு எய்தற்குரிய ஒருவனை வஞ்சனையால் புகுந்து வீழ்த்தவல்லது, ஆசையேயாகும். ஆதலால், அந்தண் அவாவினை அஞ்சிக் காப்பதே துறவறமாகும்.

Translation:

Desire each soul beguiles;

True virtue dreads its wiles.

Explanation:

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.

No comments:

Post a Comment