Tirukkuṛaḷ - திருக்குறள்

Saturday, September 19, 2020

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

 குறள் 441:

"அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்."

மு.வரதராசனார் உரை:

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

பரிமேலழகர் உரை:

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.

(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.).

மணக்குடவர் உரை:

அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

அறத்தினது சிறப்பினையறிந்து தன்னைவிட மூத்த அறிவுடைய பெரியார்களது நட்பின் அருமையினையறிந்து தனக்குத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும்.

Translation:

As friends the men who virtue know, and riper wisdom share,

Their worth weighed well, the king should choose with care.

Explanation:

Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 440:

"காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்."

மு.வரதராசனார் உரை:

தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:

தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

பரிமேலழகர் உரை:

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.).

மணக்குடவர் உரை:

காதலிக்கப்பட்ட யாவற்றின்மேலுஞ் செல்லுங் காதலைப் பிறரறியாமற் செலுத்துவனாயின் பகைவர் இவனைக் கொல்லுமாறு சிந்திக்கும் சிந்தனை இவன் மாட்டுச் செல்லாது, அயலாம். நூலென்பது அவர்கற்ற கல்வி.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

தாம் விரும்பிய (காதலித்த) பொருள்கள் யாவையென்று தமது விருப்பத்தினைப் பகைவர் அறிந்து கொள்ளாதபடி அனுபவிக்க வல்லவனானால், அப்பகைவர் தன்னை வஞ்சிக்க என்னும் எண்ணம் பழுதாகிவிடும்.

Translation:

If, to your foes unknown, you cherish what you love,

Counsels of men who wish you harm will harmless prove.

Explanation:

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless.

Tirukkural - குறள் பால்: பொருட்பால். குறள் இயல்: அரசியல். அதிகாரம்: குற்றங்கடிதல்.

 குறள் 439:

"வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை."

மு.வரதராசனார் உரை:

எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா உரை:

எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

பரிமேலழகர் உரை:

எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக.

(தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின், அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:

எல்லா நாளுந் தன்னைப் பெரியனாக நினைத்து வியவாதொழிக; வியந்தா னாயினும் அவ்வியப்பினானே நன்மை பயவாத வினையைச் செய்யாதொழிக. செய்யிற் கெடு மென்றவாறாயிற்று.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

செருக்கினால் எப்போதும் தன்னைத்தானே மதித்துக் கொள்ளாதிருப்பாயாக; தனக்கு நன்மையினை உண்டாக்காத தொழில்களை மனத்தால் விரும்பாதிருப்பாயாக.

Translation:

Never indulge in self-complaisant mood,

Nor deed desire that yields no gain of good.

Explanation:

Let no (one) praise himself, at any time; let him not desire to do useless things.